கரூரில் 10 வயது சிறுமி நேருவின் உருவத்தை, அவரது பெயரை 4,545 முறை எழுதி ஓவியமாக வரைந்து உலக சாதனை.

செல்போன் மோகத்திலிருந்து தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுமிக்கு பலரும் பாராட்டு.
கரூர் வட்டம், வாங்க பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் – ஆனந்தி தம்பதியினரின் மகள் பவித்ரா. தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் இந்தச் சிறுமிக்கு சிலம்பு மற்றும் ஓவியத்தில் அளவுகடந்த ஆர்வம். நாட்டின் 136வது குழந்தைகள் தினத்தை ஒட்டி, நேரு அவர்களை கௌரவிக்கும் விதமாக இவர் மேற்கொண்ட முயற்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆறு வரைபட காகிதங்களை இணைத்து, 66.5 இன்ச் உயரம் 56 இன்ச் அகலத்தில் பிரம்மாண்ட ஓவியத்தை இவர் உருவாக்கியுள்ளார். வெறும் 5 மணி நேரம் 55 நிமிடங்களில், ‘நேரு’என்ற வார்த்தையை 4,545 முறை கைப்பட எழுதி, அதன் மூலம் நேருவின் உருவத்தை துல்லியமாக வரைந்து அசத்தியுள்ளார்.

இந்த அரிய சாதனைக்காக, டிசிபி வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம், சிறுமி பவித்ராவின் ஓவியத்தை உலக சாதனையாக அங்கீகரித்து, அவருக்குச் சான்றிதழையும், பதக்கங்களையும் வழங்கி கௌரவித்துள்ளது.

இந்தச் சாதனை குறித்துப் பேசிய சிறுமி பவித்ரா, இதே போல் அடுத்தடுத்து உலக சாதனை படைக்க உள்ளதாகவும், செல்போன் மோகத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, இதுபோன்ற கலைப் போட்டிகளில் பெற்றோர்கள் அவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

குறிப்பாக தற்போது உள்ள நவீன காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்ஃபோன் மோகத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கரூரில் 10 வயது சிறுமி ஓவியத்தின் மூலம் உலக சாதனை படைத்துள்ளது பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பேட்டி: பவித்ரா உலக சாதனை படைத்த சிறுமி.








