கரூரில் மண்வளம் காக்க உயிர்ம வேளாண்மை கண்காட்சி: கல்லூரி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்புகள்.
கரூர் மாவட்டத்தில் மண்வளம் காக்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் பிரம்மாண்ட உயிர்ம வேளாண்மை கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்கள் காட்சிப்படுத்திய இயற்கை வேளாண் கண்டுபிடிப்புகள் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன.
தமிழக அரசு வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டம் மணவாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட அளவிலான உயிர்ம வேளாண்மை கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவின் முகப்பில், சிறுதானியங்களைக் கொண்டு வரையப்பட்டிருந்த வண்ணமயமான கோலம் அனைவரையும் வரவேற்கும் விதமாக அமைந்திருந்தது.

இந்தக் கண்காட்சியில் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ரசாயனமற்ற இயற்கை உரங்கள் மற்றும் உயிரியல் பூச்சிக்கொல்லிகள். நாட்டு விதைகள் மற்றும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள்.பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் நவீன வேளாண் தொழில்நுட்ப உபகரணங்கள்.மண்ணின் கனிம வளத்தை அதிகரிக்கும் அங்ககக் கழிவு மேலாண்மை முறைகள்.இவை அனைத்தும் விவசாயிகளுக்கு நேரடி செயல்முறை விளக்கங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த கண்காட்சியில் சிறப்பம்சமாக கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் அமைந்திருந்தன. ரசாயனப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், தாங்களே தயாரித்த இயற்கை மருந்து தெளிப்பான்கள் மற்றும் உரங்களை மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மானியங்கள் மற்றும் ரூ. 5.11 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் வழங்கினார். உடன் அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள். மாநகராட்சி மேயர், அரசு அதிகாரிகள், விவசாயிகள், வேளாண்கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.








