கரூர் அருகே பாலமலை முருகன் கோவிலில் 33 அடி உயரம் கொண்ட புதிய தேரின் வெள்ளோட்டம்: திரளாக பக்தர்கள் பங்கேற்பு

கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற பாலமலை முருகன் கோவிலில், புதிதாக வடிவமைக்கப்பட்ட 33 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த வெள்ளோட்டத்தை முன்னிட்டு, பாலமலை முருகனுக்கு பால், தயிர், நெய், இளநீர், மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பாலமுருகன், புதிய தேரில் எழுந்தருளினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வெள்ளோட்டத்தில், திரளான முருக பக்தர்கள் கலந்து கொண்டு “அரோகரா… அரோகரா…” என்ற பக்தி கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மரச் சிற்பங்கள் மற்றும் பாரம்பரிய கலை நயத்துடன் அழகுற வடிவமைக்கப்பட்ட இந்த புதிய தேர், பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காவல்துறையினரும் கோவில் நிர்வாகத்தினரும் இணைந்து சிறப்பாக பணியாற்றினர்.








