தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காலபைரவருக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப்பெடி, அரிசி மாவு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக காலபைரவருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு வடைமாலை சாற்றப்பட்டது.
பின்னர் ஆலயத்தில் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூரம் ஆலாத்தியுடன் மகா தீபாரதனை நடைபெற்றது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நடைபெற்ற காலபைரவர் சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.







