கரூரில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து பணிக்கான ஆணைகளை வழங்கினார்
கரூர் தான்தோன்றி மலை அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், மாவட்ட தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை, பயிற்சித்துறை, கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜி கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள், 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு செய்துள்ளனர்..

8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ (ITI) டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல், உள்ளிட்ட எந்த படிப்புகள் படித்திருந்தாலும், கல்வித்தகுதிக்கு ஏற்ப வேலைகள் வழங்க நிறுவனங்கள் தயாராக உள்ளது.

இன்று நடைபெற்று வரும் முகாமில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து வருகின்றனர்.

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தகுதி பெற்ற இளைஞர்களுக்கு பணிக்கான ஆணைகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி வழங்கினார்.








