தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடியின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வகித்து வந்த துறைகள் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, சுப்ரீம் கோர்ட்டின் கடுமையான கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு அமைச்சர் பதவி முக்கியமா, ஜாமின் முக்கியமா என்று கடந்த விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இது பற்றி முடிவு செய்து நாளை 28ஆம் தேதிக்குள் தெரிவிக்கும்படி சுப்ரீம் கோர்ட் கெடு விதித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவரிடம் ராஜினாமா கடிதத்தை முதல்வர் பெற்றுள்ளார்.
மற்றொரு அமைச்சரான பொன்முடி, பெண்கள் பற்றியும், சைவம், வைணவம் பற்றியும் அருவருப்பான முறையில் பேசி பொதுமக்களின் கடுமையான அதிருப்திக்கு ஆளானார். எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகள், திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் பொன்முடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.









