கோடை காலம் துவங்கிய நிலையில் வெயில் தன் வேலையை காட்ட ஸ்டார்ட் பண்ணியாச்சு! அடிக்கிற வெயிலுக்கு அடிக்கடி தர்பூசணியை தான் சாப்பிட வேண்டும் போல் இருக்கும், சாப்பாட்டிற்கு பதிலாக… இந்த வெயிலுக்கு வாங்கிய தர்பூசணியை கொண்டு அருமையான ஃபேஸ் பேக் ஒன்றை சாப்பிடும் பொழுதே போட்டுக் கொள்ளுங்கள், அப்புறம் பாருங்க, உங்க முகம் தகதகன்னு தங்கம் போல ஜொலிக்கும்.
தர்பூசணி ஃபேஸ் பேக் போடுவது எப்படி? என்பதை இந்த அழகு குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள போகிறோம் வாருங்கள். தர்பூசணி இயற்கையாகவே ஹைட்ரேட் செய்யக்கூடிய அற்புதமான ஒரு பழம் ஆகும். வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ள தர்பூசணி பழச்சாறை பயன்படுத்தி முகத்தை பராமரிக்க போகிறோம். இதற்கு முதலில் தர்பூசணி பழச்சாறு இரண்டு டீஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். தயிருடன், தர்பூசணி பழச்சாறு சேரும் பொழுது நற்குணங்கள் கூடுகிறது.
தர்பூசணி பழச்சாறு மற்றும் தயிர் சேர்ந்த இந்த கலவையுடன் ஒரு சிட்டிகை அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். கஸ்தூரி மஞ்சள் இயற்கையாகவே முகத்தை பொலிவாக்கும். சரும துவாரங்களை இறுகி மூட செய்யும். மூன்றையும் ஒன்றாக நன்கு கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். பின்னர் முகத்தை நன்கு கழுவிய பின்பு இந்த பேஸ்ட்டை பயன்படுத்த வேண்டும். முகத்தில் பேக் போட்ட பின்பு 20 லிருந்து 25 நிமிடம் வரை அப்படியே உலர விடுங்கள்.
நன்கு காய்ந்து இறுகிய பின்னர் முகத்தை குளிர்ந்த நீரினால் அலம்பி கொள்ளுங்கள். இப்படி செய்வதால் முகம் உலர்ந்து போவதில் இருந்து பாதுகாக்கப்பட்டு, ஈரப்பதத்துடன் மென்மையாக இருக்கும். ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் நிறைந்துள்ள தர்பூசணி, சருமத்திற்கு நல்ல ஊட்டச்சத்துக் கொடுக்கும்.
சருமத்தில் இருக்கும் அழுக்குகள், கிருமிகள், தூசுகள் போன்றவற்றை அகற்றி சுத்தமாக, ஆரோக்கியமாக வைத்திருக்கும். பருவகால மாற்றங்களினால் வரக்கூடிய உலர்ச்சியை நீக்கி, ஹைட்ரேட் ஆக வைத்துக் கொள்ளும். சருமத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய இந்த தர்பூசணி சாறை முகத்திற்கு வெளியே மட்டுமல்லாமல், தினமும் ஒரு டம்ளர் ஜூஸாக குடித்து வர முகம் நல்ல பொலிவாகும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் போன்றவற்றை நீக்கி சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்வதற்கு மற்றொரு வழிமுறையும் பின்பற்றலாம். ரெண்டு டீஸ்பூன் அளவிற்கு தர்பூசணி சாறுடன், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரைவதற்கு முன்னமே இரண்டு கைகளிலும் இந்த கலவையை எடுத்து முகத்தில் மென்மையாக அதிகம் அழுத்தம் கொடுக்காமல் மசாஜ் செய்ய வேண்டும். இது ஸ்கிரப் செய்வது போல ஒரு இயற்கையான முறையாகும்.










