பிரிமியர் தொடரில் ஏழாவது தோல்வியை சந்தித்த சென்னை அணி, ‘பிளே-ஆப்’ வாய்ப்பை இழந்தது.

சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின. சென்னை ‘லெவன்’ அணியில் ரச்சின் ரவிந்திரா, விஜய் சங்கர் நீக்கப்பட்டு டிவால்ட் பிரவிஸ், தீபக் ஹூடா இடம் பெற்றனர். ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

ஆயுஷ் ஆறுதல்: சென்னை அணியின் பேட்டிங் இம்முறையும் எடுபடவில்லை. முகமது ஷமி வீசிய முதல் பந்தில் ஷேக் ரஷீத் (0) அவுட்டானார். ஆயுஷ் மாத்ரே ஓரளவுக்கு நம்பிக்கை தந்தார். கம்மின்ஸ், உனத்கட் ஓவரில் தலா 2 பவுண்டரி விரட்டினார். ஹர்ஷல் படேல் ‘வேகத்தில்’ சாம் கர்ரான் (9) வெளியேறினார். கம்மின்ஸ் பந்தில் ஆயுஷ் மாத்ரே (30) அவுட்டானார்.

பிரவிஸ் அபாரம்: ஜீஷான் அன்சாரி பந்தில் ஒரு சிக்சர் விளாசிய ரவிந்திர ஜடேஜா (21), கமிந்து மெண்டிஸ் ‘சுழலில்’ போல்டானார். அடுத்து வந்த ஷிவம் துபே, ஷமி வீசிய 11வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி விரட்டினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த பிரவிஸ், கமிந்து மெண்டிஸ் வீசிய 12வது ஓவரில் 3 சிக்சர் பறக்கவிட்டார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்த போது, ஹர்ஷல் படேல் பந்தை துாக்கி அடித்த பிரவிஸ் (42), கமிந்து மெண்டிசின் கலக்கல் கேட்ச்சில் ஆட்டமிழந்தார். உனத்கட் பந்தில் துபே (12) அவுட்டானார். அடுத்து தல தோனி களமிறங்கினார். அன்சாரி பந்தை பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார். இந்த நேரத்தில் அவசரப்பட்ட தோனி (6), ஹர்ஷல் படேல் பந்தில் அவுட்டாக, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடைசி கட்டத்தில் தீபக் ஹூடா (22) ஆறுதல் தந்தார்.சென்னை அணி 19.5 ஓவரில் 154 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது.

இஷான் அபாரம்: சவாலான இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா (0) ஏமாற்றினார். அடுத்து வந்த இஷான் கிஷான், கலீல் அகமது வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். டிராவிஸ் ஹெட் (19) நிலைக்கவில்லை. ஜடேஜா ‘சுழலில்’ கிளாசன் (7) சிக்கினார். இஷான் கிஷான் (44), நுார் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். சாம் கர்ரான், ஜடேஜா பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்ட அனிகேத் வர்மா, 19 ரன்னில் அவுட்டானார்.

நுார் அகமது பந்தில் 2 பவுண்டரி விரட்டினார் கமிந்து மெண்டிஸ். மறுமுனையில் அசத்திய நிதிஷ் குமார் ரெட்டி, பதிரானா வீசிய 17வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். ஐதராபாத் அணி 18.4 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கமிந்து (32), நிதிஷ் ரெட்டி (19) அவுட்டாகமல் இருந்தனர்.

முதல் வெற்றி

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் சென்னைக்கு எதிராக ஐதராபாத் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இவ்விரு அணிகள் இங்கு விளையாடிய 6 போட்டியில் சென்னை 5, ஐதராபாத் ஒரு போட்டியில் வென்றன.

Previous articleஇந்தியாவில் Redmi A5 போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்
Next articleஒரு சொட்டு நீர் கூட இந்தியாவிடமிருந்து பாகிஸ்தானுக்கு கிடைக்காது : மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here