புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், பயங்கரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் எவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளது என்று பார்ப்போம்.

இந்தியாவின் ஐந்து நடவடிக்கைகளில் சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்தும் உத்தரவு, பாகிஸ்தானுக்கு பேரிடியாக இறங்கியுள்ளது எனலாம். இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பாயும் நதிகளின் நீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக, உலக வங்கி உதவியுடன் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 1960-ல் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் பல்வேறு போர், வெறுப்புகளைக் கடந்தும் இரு நாடுகளும் தொடர்ந்து அதை மீறாமல் உள்ளன. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டால், அது பாகிஸ்தானில் குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். குடிநீர் பஞ்சத்தோடு, விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும். இதுதான் பாகிஸ்தானுக்கான மிகப் பெரிய தண்டனையாக இருக்கும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். இது தவிர, சாலை எல்லைகளை இந்திய அரசு மூடியுள்ளது. இது பாகிஸ்தான் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரித்துள்ளது. தூதரக ரீதியாகவும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. மேலும், சரக்கு போக்குவரத்து ரீதியாக பாகிஸ்தான் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

பாக். பிரதமர் அவசர ஆலோசனை: இதற்கிடையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இன்று காலை அந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்திய அரசின் நடவடிக்கை மீது இன்று மாலை பாகிஸ்தான் எதிர்வினையாற்றும் என பாகிஸ்தான் பிரதமர், வெளியுறவு அமைச்சர் இசாக் தர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பாக். துணை பிரதமர் கண்டனம்: முன்னதாக, தொலைக்காட்சியில் பேசிய பாகிஸ்தான் துணை பிரதமர், “இந்திய அரசு எந்தவித ஆதாரத்தையும் கொடுக்கவில்லை. அவர்களுடைய எதிர்வினை முதிரிச்சியற்றதாக உள்ளது. அவர்கள் எதையும் அக்கறையோடு அணுகவில்லை. அச்சம்பவத்துக்குப் பின்னர் இந்தியா அவசர கதியில் எதிர்வினையாற்றியுள்ளது” என்று கூறியிருந்தார்.

அதேபோல், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். தங்களின் உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறோம்” என்று மட்டும் தெரிவித்திருந்தது.

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு அவசர ஆலோசனை: ஏற்கெனவே பாக். பிரதமர் தலைமையில் இன்று காலை ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் தற்போது தேசிய பாதுகாப்பு குழுவானது ஓர் அவசர ஆலோசனைக் குழு கூட்டத்தை நடத்துகிறது. இந்தக் கூட்டத்துக்கும் பிரதமர் தலைமை வகிக்கிறார். இதில் இந்தியாவுக்கான எதிர்வினையை இறுதி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் 5 அதிரடி முடிவுகள் என்னென்ன? – முன்னதாக, காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பயங்கரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:

1. எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுகிறது.

2. பஞ்சாப் மாநிலம் அட்டாரி கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உடனடியாக மூடப்படுகிறது. முறையான அங்கீகாரத்துடன் இந்த எல்லை வழியாக சென்றவர்களும், வந்தவர்களும் இந்த எல்லை வழியாக மே 1-ம் தேதிக்கு முன்பாக திரும்ப வேண்டும்.

3. சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். பாகிஸ்தானியர்களுக்கு இதற்கு முன் வழங்கப்பட்ட சிறப்பு விசாக்கள் ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு விசா மூலம் இந்தியாவில் தற்போது இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.

4. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த ஆலோசகர்கள் ஒரு வாரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.

5. இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் உள்ள முப்படை ஆலோசகர்களின் பதவிகள் ரத்து செய்யப்படுகிறது.

முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி செய்தும், ரோட்டோர கடைகளில் சாப்பிட்ட படியும், பைசரன் பள்ளத்தாக்கின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது வனப்பகுதியில் இருந்து உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். குறிப்பாக ஆண்களிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய கடற்படை அதிகாரி, உளவுத்துறை அதிகாரி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, இரு நாட்டு எல்லையில் பெருமளவில் படைகள் குவிக்கப்பட்டு வருவதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே, பாதுகாப்பு படை தலைமை தளபதி, முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் கூறும்போது, “தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு விரைவில் வலுவான பதிலடி கொடுக்கப்படும். தாக்குதல் நடத்தியவர்களுக்கு மட்டும் அல்ல இந்த சதித்திட்டத்துக்கு காரணமானவர் களுக்கும் பதிலடி கிடைக்கும். தீவிர வாதத்தை நாடு பொறுத்துக் கொள்ளாது” என்றார்.

Previous articleடாஸ்மாக் அமலாக்கத்துறை சோதனை :தமிழக அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட் சென்றுள்ளது !
Next articleதலைமைச் செயலர் முருகானந்தம் அதிரடி உத்தரவு !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here